சிலரது படங்களுக்கு மட்டும் ஏன் திருட்டு வி.சி.டி. வருவதில்லை..?” – பார்த்திபன் கேள்வி..!
இடத்திற்குத் தகுந்தாற்போல் டைமிங்காகவும், டச்சிங்காகவும், நகைச்சுவையாகவும் பேசுவதில் வல்லவரான பார்த்திபனின் பேச்சு நிகழ்ச்சிக்கும், படத்திற்கும் விளம்பரத்திற்கு உதவுவதால் பல படாதிபதிகளும் பார்த்திபனை வருந்தி, வருந்தி அழைத்தபடியிருக்கிறார்கள்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காதல் சொல்ல வந்தேன் என்ற படத்தின் கேஸட் வெளியீட்டு விழாவில் பார்த்திபன் பேசியது சற்று சர்ச்சையைக் கிளப்பிவிட்டது.
அந்த விழாவில், பேசிய பார்த்திபன், “இப்போதெல்லாம் ஒரு சாமானியனால் படத்தை ரிலீஸ் செய்ய முடியாது. ராஜாவாக இருந்தால் மட்டும்தான் இந்தக் காலத்தில் ஒரு படத்தை வெளியிட முடியும்” என்று பேச இதற்கு கூட்டத்தில் ஏக வரவேற்பு.
இது பற்றி சமீபத்தில் பார்த்திபன் அளித்துள்ள பேட்டி இது..!
கேள்வி : பட விழாவில் நீங்கள் குறிப்பிட்ட ராஜா யார்..?
பார்த்திபனின் பதில் : அங்கே குவைத் ராஜா சிறப்பு விருந்தினராக வந்து கேஸட்டை பெற்றுக் கொண்டார். அதை வைத்துத்தான் நான் இது போல கேஸெட் பெற்றுக் கொள்ள மட்டும் இந்த மாதிரி ராஜாக்கள் போதாது.. படம் எடுக்கவும் ராஜாக்கள் தேவை என்ற அர்த்தத்தில் பேசினேன்.
என்னதான் மந்திரிகள் படமெடுத்தாலும் இந்த மாதிரி ராஜாக்கள் தேவை என்றுதான் சொன்னேன். அந்தப் பட விழாவில் சம்பந்தப்பட்டவர்களை பாராட்டிப் பேசுவே நான் சென்றேன். விழாவுக்கு நான் சென்றதன் நோக்கமே அதுதான். மற்றபடி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் அப்படி பேசவில்லை..
கேள்வி : இனி சாமானியர்களால் படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாது என்றும் அந்த விழாவில் பேசியிருக்கிறீர்களே..?
பார்த்திபனின் பதில் : ஆமாம்.. சாமானியர்களால் இனி படமெடுத்து ரிலீஸ் செய்ய முடியாது என்பதுதான் யதார்த்தம். இப்போதெல்லாம் படமெடுத்து ரிலீஸ் செய்ய ஒரு பெரிய மீடியா அவசியம் தேவை.
கேள்வி : அதிகம் பப்ளிசிட்டியில்லாத சுப்ரமணியபுரம், நாடோடிகள் போன்ற படங்களும் வெற்றி பெற்றிருக்கிறதே..?
பார்த்திபனின் பதில் : ஆம். ஒரு சில படங்கள் இதற்கு விதிவிலக்கு. அங்காடி தெரு வெளியான முதல் இரு வாரங்கள் தியேட்டரில் பெரிய அளவு கூட்டம் இல்லை. அதன் பின் தொலைக்காட்சி மூலம் விளம்பரம் செய்த பிறகுதான் அந்தப் படம் மிகப் பெரிய ஹிட்டானது.
எனது முதல் படம் புதிய பாதை வெளிவந்தபோது ரஜினி, கமல் படங்களும் வெளியாகின. ரஜினி, கமல் படங்களுக்கு டிக்கெட் கிடைக்காதவர்கள் வந்து என் படத்தைப் பாருங்கள் என்று நான் வித்தியாசமாக விளம்பரம் செய்தேன். அது கிளிக்காகி படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. ஆக எப்படிப் பார்த்தாலும் இன்றைய சூழ்நிலையில் விளம்பரம் என்பது மிக மிக அவசியம் தேவை.
கேள்வி : ஒரு சில படங்களுக்குத் திருட்டு விசிடிக்களே வருவதில்லை என்றும் அந்த விழாவில் பேசி பரபரப்பைக் கிளப்பியிருக்கிறீர்களே..?
பார்த்திபனின் பதில் : ஆமாம்.. குறிப்பிட்ட ஒரு சில படங்களுக்குத் திருட்டி விசிடி வருவதில்லை என்பது உண்மைதானே..? இவர்களது பட விசிடிகள் வருவதை இவர்கள் தடுப்பது போல மற்ற பட விசிடிகளையும் இவர்கள் தடுக்கலாமே..? ஏன் தடுப்பதில்லை..? இப்படி எல்லா திருட்டி விசிடிகளையும் தடுத்தால் திரைப்பட உலகம் நன்றாக இருக்கும்..” என்றார்.
நடிகர் பார்த்திபன் கலந்து கொள்ளாத திரையுலக விழாக்களே இல்லை என்று சொல்லுமளவுக்கு ...
திகதி:23 06 2010 - 02:30:16 நிருபர்:001