முகப்பு
ஆவணம்

தேடல்

 
 
 
 
 
 
 






புலிகளின் ரன்வேயை கைப்பற்றிய ராணுவம்
LTTE Airstrip
இலங்கையில் பரந்தன்-பூனேரி சாலையில் விடுதலைப் புலிகளின் விமானப் படை ரன் வேயை ராணுவம் கைப்பற்றியது.

நிவில் என்ற இடத்தில் உள்ள இந்த 200 மீட்டர் நீள ரன்வேயை விடுதலைப் புலிகள் தங்களது சிறிய ரக விமானங்களை இயக்க பயன்படுத்தி வந்ததாக ராணுவம் கூறியுள்ளது. இதுபோல புலிகள் மேலும் சில ரன்வேக்களையும் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

பரந்தன்-பூனேரி சாலையின் 200 மீட்டர் பகுதியையே மேம்படுத்தி அதையே புலிகள் ரன் வேயாக பயன்படுத்தி வந்ததாகவும், இதை அவசர காலத்தில் விமானங்களை தரையிறக்க பயன்படுத்தி வந்ததாகவும் ராணுவம் கூறுகிறது.

இப்போது பரந்தனுக்கு 14 கி.மீ. மேற்கே நிலை கொண்டுள்ள ராணுவத்தின் டாஸ்க் போர்ஸ் 1 படைப் பிரிவு அந்தப் பகுதியை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ராணுவம் கூறுகிறது.
திகதி:21 11 2008 - 10:28:07 நிருபர்:001
தெற்காசிய பல்கலை.-மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியாவில், தெற்காசிய பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான சார்க் நாடுகளின் ஒப்பந்தத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இப்பல்கலைக்கழகம் இந்தியாவில் அமையவுள்ளது. சார்க் அமைப்பின் சார்பில் இந்தப் பல்கலைக்கழகம் நிர்மானிக்கப்படுகிறது. இதுதொடர்பாக சார்க் நாடுகளுக்கிடையே ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர், இதுகுறித்து பிரதமர் அலுவலக இணை அமைச்சர் பிருத்விராஜ் செளகான் செய்தியாளர்களிடம் பேசுகையில், சார்க் அமைப்பை மேலும் வலுப்படுத்த இந்தப் பல்கலைக்கழகம் உதவும். இது மிகப் பெரிய நிகழ்வாகும்.

சார்க் பிராந்தியத்தில் நிலவும் கல்வி மற்றும் தொழில்நுட்பத் திறனை உலகுக்கு பறை சாற்ற இந்த பல்கலைக்கழகம் பெரும் உதவியாக இருக்கும்.

இந்தப் பல்கலைக்கழகத்தின் எல்லை இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்தியாவுக்கு வெளியே சார்க் நாடுகளில் இதன் வளாகங்கள் மற்றும் மையங்கள் அமைக்கப்படும்.

பல்கலைக்கழகத்தின் முதல் கூட்டம் 2010ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கும்.

இந்தப் பல்கலைக்கழகத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பை கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் மாதம் டாக்காவில் நடந்த சார்க் மாநாட்டின்போது பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டார்.

இதையடுத்து 2007ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டெல்லியில் நடந்த சார்க் மாநாட்டின்போது, இதுதொடர்பாக சார்க் நாடுகளின் அரசுகளுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

இந்தியாவில், இந்திய அரசால் அமைக்கப்படும் முதல் சர்வதேச பல்கலைக்கழகம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பல்கலைக்கழகம் முற்றிலும் தன்னாட்சி அந்தஸ்துடன் இயங்கும் என்றார் அவர்.
திகதி:21 11 2008 - 10:23:13 நிருபர்:001
சென்னை சென்ட்ரலில் வெடிகுண்டு புரளி-பீதி
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் வந்ததால் அங்கு பல மணி நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ரயில்வே 'ஹெல்ப்லைன்' தொலைபேசி எண்ணுக்கு இன்று அதிகாலை 6 மணியளவில் ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவன், 8 மணியிலிருந்து 9 மணிக்குள் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிக்கும் என்று மிரட்டிவிட்டு துண்டித்துவிட்டான்.

இதனையடுத்து ரயில்வே ஐ.ஜி. உமா கணபதி சாஸ்திரி தலைமையில் ரயில் நிலையம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

ரயில்வே பாதுகாப்புப் படை, ரயில்வே போலீசார், மாநகர காவல்துறையினர் என நூற்றுக்கணக்கான போலீசார் மோப்ப நாய்களுடன் சோதனையில் ஈடுபட்டனர்.

நின்றிருந்த ரயில்கள், பயணிகள் தங்குமிடம், பயணிகளின் உடமைகள், பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கடைகள், பார்சல்கள் என அனைத்துமே சோதனையிடப்பட்டன.

பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். சுமார் 4 மணி நேரம் நீடித்த இந்த  சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.

இந்த சோதனைகளால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பும் பீதியும் நிலவியது. பல பயணிகள் அச்சத்தில் ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிவிட்டனர்.

ஒரு ரூபாய் நாணயத்தால் இயங்கும் பொது தொலைபேசியில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளது தெரியவந்துள்ளது.
திகதி:21 11 2008 - 10:21:15 நிருபர்:001
கருணாநிதி ராஜினாமா கோரும் எஸ்ஆர்பி!
சென்னை சட்டக் கல்லூரி வன்முறைக்கு பொறுப்பேற்று சிறந்த மரபுகளை பின்பற்றி முதல்வர் கருணாநிதி ராஜினாமா செய்திருக்க வேண்டும் என அவரது பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாகத் தாக்கினார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன்.

நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

மதுரையில் நிலவி வரும் நிலைதான் சென்னையிலும் தற்போது உருவாகி உள்ளது. சென்னை சட்டக் கல்லூரியில் குறிப்பிட்ட ஒரு சில மாணவர்கள் திட்டமிட்டு தாக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த திட்டத்தை முன்கூட்டியே அறிந்த காவல் துறை கல்லூரியின் வாசலில் பெரும் படையை நிறுத்தி வைத்திருந்தது.
திகதி:21 11 2008 - 10:16:01 நிருபர்:001
ஈழத்தமிழருக்கு ஆதரவான எழுச்சியில் உடல் வலுக்குறைந்தோர் பங்கேற்பு
இந்திய மத்திய மாநில அரசைக் கண்டித்து ஈழத்தமிழருக்கு ஆதரவாக உடல் வலுக்குறைந்தோர் தமிழ்நாடு எங்கும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழ்நாடு உடல் ஊனமுற்றோர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் த.பிரகாஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

எமது யெங் இண்டியன் சொசைட்டியின் சார்பாக உடல் ஊனமுற்றோர்கள் ஈழத்தில் போர் நிறுத்தம் மற்றும் அனைத்துலக தொண்டு நிறுவனங்களை வன்னியில் அனுமதிக்கக் கோருதல் உள்ளிட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு எங்கும் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

திகதி:21 11 2008 - 10:02:04 நிருபர்:001
மேலதிக சிகிச்சைக்காக செல்லும் நோயார்களை திருப்பியனுப்பும் சிறிலங்கா படை
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மருத்துவமனைகளில் இருந்து வவுனியாவுக்கு நோயாளர்களை மேலதிக சிகிச்சைக்காக கொண்டு செல்லும் நோயாளர் காவு வாகனங்களை சிறிலங்கா படையினர் திருப்பியனுப்பும் அவலம் தொடர்கின்றது.

முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மருத்துவமனைகளுக்குரிய நோயாளர் காவு வாகனங்களை மூன்று நாட்களாக வவுனியாவுக்கு செல்லவிடாது ஓமந்தையுடன் திருப்பி அனுப்பிய சிறிலங்கா படையினர், நேற்று முன்நாள் நோயாளர் வாகனங்களை வவுனியாவுக்கு செல்ல அனுமதியளித்த போதிலும் வவுனியாவில் இருந்து கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவிற்கு அனுமதிக்கவில்லை.

நோயாளர்களின் அவலம் தொடர்பாக மருத்துவமனைகளின் நிர்வாகத்தினர் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடன் தொடர்பு கொண்டதுடன் நோயாளர் வாகனங்களை இடர்கள் இல்லாமல் வவுனியா சென்று வர சீரான போக்குவரத்து ஒழுங்கினை செய்து தருமாறும் வேண்டுகோள் விடுத்திருக்கின்றனர்.

திகதி:21 11 2008 - 09:59:59 நிருபர்:001
கோவிலுக்குச் சென்ற ரணிலுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கறுப்புக்கொடி
சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காட்டில் உள்ள அக்னீஸ்வரர் கோவிலில் வழிபாடு செய்வதற்காக ரணில் விக்ரமசிங்க நேற்று வியாழக்கிழமை சென்றார்.

இதனை அறிந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் முன்கூட்டியே அங்கு திரண்டனர். அவர்கள், ரணில் விக்ரமசிங்க வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிப்பதை சிறிலங்கா இராணுவம் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கறுப்புக்கொடி ஏந்தியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திகதி:21 11 2008 - 09:59:16 நிருபர்:001
இந்திய அதிகாரிகள் சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றனர்: சோலை
இந்திய அதிகாரிகள் சிங்கள இனவாதிகளின் சிந்தனைகளையே பிரதிபலிக்கின்றனர் என்று தமிழ்நாட்டின் மூத்த ஊடகவியலாளரும் எம்.ஜி.ஆரின் ஆலோசகராக செயற்பட்டவருமான சோலை தெரிவித்துள்ளார்.

குமுதம் குழுமத்தின் "றிப்போர்ட்டர்" வாரமிருமுறை இதழில் சோலை எழுதியுள்ள கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

வரலாற்றுக்காலம் தொட்டு இந்தியா சந்தித்த படையெடுப்புக்களெல்லாம் இமயம் கடந்து வந்தவைதான். அதன் பின்னர் பாகிஸ்தான் படையெடுப்புக்களைச் சந்தித்தோம். இந்திய - சீன எல்லைப் பிரச்னை கூட இமயத்தின் மடியில் நடந்த விபரீத விளையாட்டுத்தான்.

எனவே, ஆபத்து என்பது இந்தியாவிற்கு வட திசையிலிருந்துதான் வரும் என்ற நம்பிக்கை இருந்தது. இனி அந்த ஆபத்து தென் திசையிலிருந்தும் கடல் கடந்தும் வரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

இராணுவ தளங்களை அமெரிக்கா தனது எல்லைக்காவல் சாவடிகளாகக் கருதுகிறது. ஆகவே உலகம் முழுமையும், குறிப்பாக ரஷ்யா, சீனம் ஆகிய நாடுகளைச்சுற்றி அத்தகைய தளங்களை அமைத்த அந்த நாடு, இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நமது தலைக்கு மேலே பாகிஸ்தானில் இராணுவத்தளம் அமைத்தது. நமது காலடியில் இலங்கை திருகோணமலையில் இன்னொரு இராணுவத்தளம் அமைக்க முயன்றது. அப்படி அமைந்தால் எப்போது எரிமலை வெடிக்கும் என்ற அச்சத்தோடுதான் இந்தியா உறங்க வேண்டியிருக்கும்.

எனவே, திருகோணமலையில் இராணுவத்தளம் அமைவது இந்தியாவின் நலன்களுக்கு எதிரானது என்று சிறிலங்கா அரசை அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி எச்சரித்தார். பலன் கிடைத்தது.

ஆனாலும் தமது இராணுவத்தள முயற்சியை அமெரிக்கா கைவிட்டு விடவில்லை. உலகில் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு யுத்தம் நடைபெற வேண்டும். அப்போதுதான் அதன் ஆயுத வியாபாரம் செழித்துக்கொழிக்கும்.

எனவே, அவசியப்பட்டால் அடிவானத்தில் கூட இராணுவத்தளம் அமைக்கும்.

அப்படித்தான் இந்தியாவின் எதிர்ப்பின் காரணமாக திருகோணமலையில் இராணுவத்தளம் அமைக்கும் முயற்சியைக் கைவிட்ட அமெரிக்கா அதற்கு அப்பால் தென்திசையில் டிகோ கார்ஷியா தீவில் தளம் அமைத்திருக்கிறது. அந்த இராணுவத்தளம் கன்னியாகுமரியிலிருந்து சரியாக 900 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்திருக்கிறது. ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது, இதே இராணுவத்தளத்திலிருந்துதான் அதன் போர் வானூர்திகள் புற்றீசல்களாகப் பறந்து சென்றன.

டிகோ கார்ஷியா இராணுவத்தளம் என்பது நமது காலடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்ற வெடிகுண்டு. வாஷிங்டனிலிருந்து விசையை அழுத்தினால் இங்கே குண்டு வெடிக்கும். எனவே, அந்த இராணுவத்தளம் அமைந்த பின்னர் தென்திசை கடற்பகுதியின் பாதுகாப்பை இந்திரா காந்தி பலப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் மேலாக, இலங்கையில் எந்த நாடும் அழுத்தமாகத்தடம் பதிப்பதை அவர் விரும்பவில்லை.

காரணம், இந்துமாக் கடலில் இலங்கை கேந்திரமான இடத்தில் அமைந்திருக்கிறது. குறிப்பாக, கப்பல் போக்குவரத்தில் மேற்கு நாடுகளுக்கும் கிழக்கு நாடுகளுக்கும் இளைப்பாறும் இடமாக இருக்கின்றது. இதனை  தொட்டுக்கொண்டுதான் வர்த்தகக் கப்பல்கள் செல்கின்றன.

எனவே, இந்தக் கடல் மார்க்கத்தில் அமெரிக்கா ஒரு கண் வைத்திருக்கிறது.

இன்னொரு பக்கம், பாகிஸ்தானும் சீனமும் இலங்கையில் தமது ஆதிக்க நங்கூரத்தை இறக்கி இருக்கின்றன. கதிர்காமம் அருகே ஐயாயிரம் கோடி ரூபாயில் சீனம் ஒரு துறைமுகத்தையே அமைத்துத் தருகிறது, எண்ணெய்க்கிணறுகள் அமைக்க அந்த நாட்டிற்கு சிறிலங்கா அனுமதி அளித்திருக்கிறது.

அதேபோல் பாகிஸ்தானின் ஆயுத உதவிகள் பல்கிப்  பெருகி இருக்கின்றன. எத்தகைய தலையீடுகள் இலங்கையில் அடியெடுத்து வைக்கக்கூடாது என்று அன்னை இந்திரா  எச்சரிக்கையாக இருந்தாரோ, அந்த ஆபத்துக்கள் அங்கே கால் பதித்திருக்கின்றன. அதனைப்பற்றி இன்றைய மத்திய அரசு கவலைப்படவில்லை.

இலங்கையில் மூன்று இடங்களில் அமெரிக்கத்தளங்கள் அமைத்து அடியெடுத்து வைப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. அதனைப்பற்றியும் இங்கேயுள்ள அமெரிக்கச் சட்டாம் பிள்ளைகள் இலங்கையை எச்சரிக்கவில்லை.
இலங்கை மீது இந்த நாடுகளுக்கு ஏன் இவ்வளவு அக்கறை? அது ஒரு சின்னஞ்சிறிய நாடு. ஆனால் அதனைத் தங்கள் தளமாகப் பயன்படுத்த இந்த நாடுகள் போட்டி போடுகின்றன.

ஆம். என்றாவது ஒருநாள் இந்தியாவிற்கு எதிராக இந்தத்தளங்கள் தங்களுக்குக் கைகொடுக்கும் என்று நம்புகின்றன.

ஆகவேதான் அன்னை இந்திரா காந்தி விழிப்பாக இருந்தார். அவருடைய பீடத்தில் இன்று அமர்ந்திருப்பவர்கள் தியானத்தில் இருக்கிறார்கள்.

இலங்கைத் தமிழர் தொடர்பாக இதுவரை இந்தியாவுடன் செய்துகொண்ட எந்த ஒப்பந்தத்தையும் சிங்கள அரசு செயற்படுத்தவில்லை. கடைசியாக, ராஜீவ் காந்திக்கும் ஜெயவர்தனவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டைக் கூட இன்றைய ராஜபக்ச அரசு தீயிட்டுக் கொளுத்திவிட்டது. இதனைக் கூட ஏன் தட்டிக் கேட்கவில்லை என்று கேட்டால் இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடமாட்டோம் என்று மன்மோகன் சிங்  அரசு மௌன விரதம் இருக்கிறது.

அதே சமயத்தில், ஈழப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத்தான் தீர்வு காண முடியும் என்று உபந்நியாசம் செய்கிறார்கள். அப்படித் தீர்வு காண விரும்புகிறவர்கள் அதிகாரிகளை மட்டுமே பயன்படுத்தக்கூடாது. உண்மையிலேயே ஈழப்பிரச்னைக்குத் தீர்வுகாண வேண்டுமென்றால் அதன் ஆழத்தை, அதன் விரிவை, அதன் வரலாற்றை உணர்ந்த அரசியல் தலைவர்களும் இடம்பெற வேண்டும். இன்னும் சொல்லப் போனால் அவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும்.

இன்றைக்கு ஈழப் பிரச்சினையை சிங்கள இனவாதக் கட்சிகள் எப்படிப் பார்க்கின்றன? தனி ஈழம் அமைந்தால் அது அகண்ட இந்தியாவின் ஓர் அங்கமாகிவிடும் என்கிறார்கள். இந்தியா அதற்கு ஆசைப்படுகின்ற ஏகாதிபத்திய நாடு என்கிறார்கள். இன்னொரு பக்கம், இந்தியாவிலிருந்து தமிழகம் பிரிந்து தமிழீழத்தோடு சேர்ந்து தனி நாடாகிவிடும் என்று கதை கட்டுகிறார்கள்.

தமிழகம் தனி நாடு என்பதனை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான். ஆனால், சிங்கள இனவாதிகளின் பிரசார அடிப்படையில்தான் இங்குள்ள அதிகாரிகள் ஈழப்பிரச்னையைப் பார்க்கிறார்கள்.

ஆகவே, அவர்கள் சிங்கள அரசின் சிந்தனைகளைப் பிரதிபலிக்கிறார்கள்.

ஈழப்பிரச்சினைக்கு இராணுவ ரீதியாகத் தீர்வுகாண முடியாது என்று ஒரு பக்கம் இந்திய அரசு அருள்வாக்கு சொல்கிறது.

ஆம். இராணுவ மோதல்கள் தீர்வாகாது. ஆனால், நடுநிலையில் நின்று நியாயத்தீர்ப்பு வழங்க வேண்டியவர்கள் என்ன செய்கிறார்கள்? ஒரு பக்கம் சிங்கள அற்குத்  தற்காப்பு ஆயுதங்கள் வழங்குகிறோம் என்கிறார்கள். உண்மையில் அந்த உதவிகள் ஈழத்தில் இரத்த ஆறுகள் பெருக்கெடுப்பதற்குத்தான் வகை செய்கின்றன. இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

 

திகதி:21 11 2008 - 09:57:05 நிருபர்:001
நோர்வே பேர்கனில் 48 மணிநேர உண்ணாநிலைப் போராட்டம் ஆரம்பம்
மரணத்துள் வாழும் இலங்கை மக்களின் அவலங்களை நோர்வே அரசாங்கத்திற்கும் அனைத்துலகிற்கும் வெளிப்படுத்தத் தொடர்ச்சியாக 48 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நோர்வேயில் உள்ள பேர்கன் தமிழ் இளையோர் அமைப்பு (20.11.08),வியாழன் மாலை 6.00 மணியளவில் மெதடிஸ்ட் ஆலயத்தில் ஆரம்பித்தனர்.

இந்த உண்ணாநிலை போராட்டத்தில் இளையோர்களுடன் இணைந்து மொத்தமாக 13 தமிழ் மக்கள் பங்குபற்றினர். தொடக்க நிகழ்வில், பெருந்திரளான தமிழ் மக்களுடன் நோர்வேஜிய மக்களும் பார்வையாளர்களாக கலந்துகொண்டனர்.

திகதி:21 11 2008 - 09:50:13 நிருபர்:001
கடன் அட்டை மோசடி : இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது
கிரடிட் கார்ட் (கடன் அட்டை) மோசடி தொடர்பில் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்கப்பூர் குடிவரவு,குடியகல்வு திணைக்களமும் வர்த்தக நுகர்வோர் திணைக்களமும் இணைந்து நடத்திய சோதனையின் போதே இவர்கள் ஏழு பேரும் கைது செய்யப்பட்டனர்.

போலியான முறையில் கிரடிட் கார்ட்களை அச்சடித்து அதன் பொருட்களைக் கொள்வனவு செய்து 20,000 ஸ்டேலிங் பவுண்களை இவர்கள் மோசடி செய்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
திகதி:21 11 2008 - 09:49:12 நிருபர்:001
சிறுவர் உளவள மேம்பாட்டுச் செயற்பாடுகள் -செஞ்சிலுவைச் சங்கம் நடவடிக்கை
இலங்கை செஞ்சிலுவைச் சங்க மாவட்ட கிளையானது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமைகள் காரணமாக இடம்பெயர்ந்து, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கும் சிறுவர்களின் உளவள மேம்பாட்டு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. நலன்புரி நிலையங்களில் உள்ள சிறுவர்கள் இடப்பெயர்வுகள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் காரணமாக உள ரீதியாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
திகதி:21 11 2008 - 09:47:56 நிருபர்:001
மன்னார் அகதிகளுக்குத் தீயணைப்புப் பயிற்சி
எதிர்பாராத தீ விபத்துக்களில் இருந்து மக்களைப் பாதுகாக்கும் முன் எச்சரிக்கை வேலைத்திட்டம் ஒன்று மன்னாரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது . அசாதாரண சூழ்நிலை காரணமாக இடம் பெயர்ந்து முகாம்கள் மற்றும் நலன்புரி நிலையங்கள் என்பவற்றில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து வாழ்ந்து வரும் அகதிகளுக்கே தீயணைப்புத் தொடர்பான செயன்முறைப் பயிற்சிகளை மன்னார் சர்வோதய அமைப்பு வழங்கி வருகின்றது .

அண்மையில் நலன்புரி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட எதிர்பாராத தீ விபத்தை அடுத்தே மேற்படி தீயணைப்புப் பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக மன்னார் சர்வோதய அமைப்பின் மாவட்ட இணைப்பாளர் எஸ். யுகேந்திரன் தெரிவித்தார் .

தீ அணைப்பு செயன்முறைப் பயிற்சிக்கு மன்னாரில் இயங்கிவரும் புலம் பெயர்ந்தவர்களுக்கான அமைப்பு (IOM) அனுசரணை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
திகதி:21 11 2008 - 09:46:58 நிருபர்:001
நாடாளுமன்றத்தில் இன்று கல்வி அமைச்சு நிதி குறித்து விவாதம்
 
  2009ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட குழு நிலை விவாதத்தின் ஐந்தாவது நாளான இன்று 21ஆம் திகதி கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சுக்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

பாராளுமன்றத்தில் இன்றைய விவாதம் மாலை ஐந்து மணி வரை நடைபெறும். அது தொடர்பான வாக்கெடுப்பும் இடம்பெறும்
திகதி:21 11 2008 - 09:45:58 நிருபர்:001
2009இன் தரம் ஒன்றுக்கான மாணவர் அனுமதி
  2009ஆம் புதிய ஆண்டில் தரம் ஒன்றுக்கு மாணவர்களைப் பாடசாலைகளில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளைக் கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

இதன்படி, தரம் ஒன்றில் மாணவர்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி இடம் பெறுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனால், குறித்த மாணவர்களின் தகவல்களைப் பாடசாலைகளில் எதிர்வரும் டிசம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
திகதி:21 11 2008 - 09:44:43 நிருபர்:001
பள்ளி வேன் கவிழ்ந்து 51 குழந்தைகள் காயம்!
பெரம்பலூர் அருகே பள்ளி வேன் கவிழ்ந்ததில் அதிலிருந்த 51 குழந்தைகள் காயமடைந்தனர். ஒரு குழந்தையைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் திட்டக்குடியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு சொந்தமான வேனில் தினசரி சுமார் 52 குழந்தைகள் சென்று வருவது வழக்கம்.

இந் நிலையில் பள்ளி குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வேன் பள்ளிக்கு செல்லும் போது வயலப்பாடி-கீரனூர் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் வேனில் பயணம் செய்த 51 பள்ளி குழந்தைகள் காயமடைந்தனர். இதில் ஒரு குழந்தை காணவில்லை என்று கூறப்படுகிறது.

காயமடைந்த குழந்தைகளை சிகிச்சைக்காக திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேன் இன்னும் கவிழ்ந்து கிடக்கும் நிலையில் காணாமல் போன குழந்தை குறித்து பயம் பரவியுள்ளது.
திகதி:20 11 2008 - 06:48:05 நிருபர்:001

<< முந்தையது 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 அடுத்தது >>





தமிழ்ச்செய்தி இணையங்கள்
மாலைமலர்
தினமணி
உதயன்
தினக்குரல்
வீரகேசரி
நிதர்சனம்
தமிழ்நாதம்
வணக்கம்   மலேசியா
அம்பலம்