வடகொரியாவை வென்றது பிரேசில்
சர்வதேச கால்பந்து சம்மேளனமான ஃபிஃபா வின் தரப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் பிரேசில் அணியும் 105 வது இடத்தில் இருக்கும் வடகொரிய அணியும் மோதிய போட்டியில் பிரேசில் 2-1 என்கிற கோல் கணக்கில் வென்றது.
பிரேசில் ஐந்து முறை உலகக் கோப்பை போட்டியை வென்றுள்ள ஒரு அணி. வடகொரியாவோ 44 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிச் சுற்றுப் போட்டிகளுக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.
இந்தப் போட்டியில் பிரேசில் சுலபமாக வெற்றி பெற்றுவிடும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. ஆட்டத்தில் முதல் பாதியில் எந்த அணியும் கோல் போடாத முடியாதபடி கடுமையான மோதல் இடம் பெற்றது. பிரேசில் அணியில் தாக்குதலுக்கு கடுமையான எதிர்தாக்குதலை வடகொரிய அணி நடத்தியது.
இரண்டாம் பகுதியில், ஆட்டத்தின் 55 ஆவது நிமிடத்தில் பிரேசில் அணியின் மைக்கான் அடித்த கோல் மூலம் பிரேசில் 1-0 என்கிற கணக்கில் முன்னிலை பெற்றது. பின்னர் 72 ஆவது நிமிடத்தில் எலானோ மற்றொரு கோல் போட பிரேசில் 2-0 என்று முன்னிலை பெற்று வெற்றி பெரும் நிலைக்கு வந்தது.
ஆனால் ஆட்டம் முடிவடைவதற்கு ஒரு நிமிடம் முன்னதாக, 89 ஆவது நிமிடத்தில் வடகொரியாவின் யுன் நாம் ஜி ஒரு கோலடிக்க 2-1 என்கிற நிலை ஏற்பட்டு ஆட்ட முடிவில் பிரேசில் வெற்றி பெற்றது.
பிரேசில் அணியில் பிரபலமான வீரர்கள் பலர் இருந்தாலும், வடகொரிய அணியில் பலர் சர்வதேச அரங்கில் அறியப்படாதவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த அணியின் ரி ம்யாங் குக் தமது நாட்டு அணியினர் மட்டுமன்றி பிரேசில் நாட்டு வீரர்களில் பாராட்டையும் பெற்றார்.
ஐவரி கோஸ்ட் மற்றும் போர்ச்சுகல் இடையேயான போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.
திகதி:16 06 2010 - 17:10:19 நிருபர்:001