கனடாவில் நாளை ஜி-20 மாநாடு : இந்தியப் பிரதமர் இன்று பயணம்
ஜி-20 மாநாடு கனடாவின் டொரண்டோ நகரில் நாளையும் நாளை மறுதினமும் ( 26, 27) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் உயர்நிலைக் குழுவினர் செல்லவுள்ளனர். இன்று புறப்படும் பிரதமர் தலைமையிலான குழு டொரண்டோவுக்கு நாளை காலை சென்றடையும்.
மாநாட்டில் பங்கேற்ற பின்னர் கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் அளிக்கும் விருந்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்வார்.
பிரதமருடன் திட்டக் குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா உள்ளிட்டோரும் செல்லவுள்ளனர்.
உலக பொருளாதாரத்தின் இன்றைய நிலை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
கனடா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளன.
மாநாட்டையொட்டி ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் கூட்டம் தென் கொரியாவிலுள்ள புசான் நகரில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி கலந்துகொண்டார்.
ஞாயிறன்று ஒபாமாவுடன் சந்திப்பு
மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து அமெரிக்க நிர்வாகத்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும்போது அதிபர் ஒபாமாவை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்துப் பேசுவார். பாதுகாப்பு விஷயங்கள், பயங்கரவாதத்தை வேரறுத்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் பேசுவர்.
ஜி-20 மாநாடு மூலம் இந்தியாவுடன் நெருங்கிய உறவை அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கொண்டுள்ளார். இதன்மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான உறவு மேம்படும். சமீபத்தில்அமெரிக்காவில் இரு நாட்டு அமைச்சர்கள், அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையும் கூட பயனுள்ளதாக அமைந்தது.
தென் கொரியா, ஜப்பான், சீனா, இந்தோனேஷியா, ஆஸ்திரேலிய பிரதமர்களுடனும் ஒபாமா பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். ஆசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏற்றுமதியை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டுள்ளோம்" என்றார் அவர்.
வாஷிங்டனில் கடந்த ஏப்ரலில் நடந்த அணுசக்தி பாதுகாப்பு உச்சிமாநாட்டின்போது இருவரும் கடைசியாக சந்தித்துப் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.
திகதி:25 06 2010 - 05:40:36 நிருபர்:001