ஜி-20 மாநாட்டை எதிர்த்து கனடாவில் போராட்டம்
போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.
கனடாவின் டொரண்டோ நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது. இதில் பிரதமர் மன்மோகன் சிங், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த மாநாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து டொரண்டோவில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது.கறுப்பு சட்டை அணிந்திருந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, மாநாட்டுக்கு எதிராகவும், அதில் பங்கேற்க வந்த தலைவர்களை கடுமையாக விமர்சித்தும் கோஷம் எழுப்பினர்.
அப்போது போராட்டத்தில் பங்கேற்றவர்கள் திடீரென வன்முறையில் இறங்கினர்.அருகில் இருந்த கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனமும் தீ வைத்து எரிக்கப்பட்டது.
அருகில் இருந்த வங்கியின் ஜன்னல்கள் சேதப்படுத்தப்பட்டன. கலவரத்தை கட்டுப்படுத்த முயற்சித்த பொலிஸார் மீதும், போராட்டக்காரர்கள் கற்களை வீசினர்.
இதையடுத்து, கண்ணீர் புகை குண்டுகளை வீசி பொலிசார் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவ இடத்துக்கு கூடுதல் பொலிசார் வரவழைக்கப்பட்டனர்.
மாநாடு நடக்கும் இடத்துக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இது குறித்து பொலிஸ் அதிகாரிகள் கூறுகையில்,
"வேண்டும் என்றே வன்முறையில் ஈடுபட விரும்பும் சிறிய கூட்டம் தான் இச்செயலை செய்திருக்கிறது" என்றனர்.
திகதி:28 06 2010 - 11:13:41 நிருபர்:001